Categories
கல்வி மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் தேர்வு எழுதிய கல்லூரிமாணவர்கள்… கல்லூரிக்குள் அனுமதிக்காத நிர்வாகம்…!!!

தாமரைக்குளம்  அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் தங்களது தேர்வுகளை சாலையோரங்களிலும், பயணிகள் நிழற்குடை, மைதானங்களிலும் அமர்ந்து எழுதியுள்ளனர்.

தாமரைக் குளம் பகுதியில் உள்ள அரியலூர் நகரில் அரசு கலை கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 13 துறைகளில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தது. அதன்பின் அரசு அறிவிப்பின் படி கடந்த 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் இறுதி ஆண்டு மாணவ மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தி வருகின்றனர்.

முதலாம் ஆண்டுமாணவர்கள் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தங்களது பாடங்களை ஆன்லைன் மூலமே கற்று வருகின்றனர். தற்பொழுது அரசு அறிவிப்பின்படி 10 நாட்களாக மாணவ மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் அரியலூர் அரசுக் கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள், ஜெயங்கொண்டம், தா.பழூர், செந்துறை, திருமானூர், கூத்தூர், விருதாச்சலம், போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 800 பேர் வருகின்றனர். அவர்கள் தங்களது தேர்வுகளை சாலையோரங்களிலும், தெருக்களிலும், பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடைகளிலும், சில விளையாட்டு மைதானங்களிலும் எழுதுகின்றனர். இவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.

இது தொடர்பாக மாணவர்கள் கூறுவது,   இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு வீட்டில் இருந்த படியே தேர்வுகளை எழுதி மதியம் 3 மணிக்குள் கல்லூரியில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் வீட்டில் இருந்தபடி தேர்வை எழுதி விடைத்தாள்களை மதியம் 3 மணிக்குள் கல்லூரியில் ஒப்படைக்க முடியாது. இதனால்தான் நாங்கள் கல்லூரிக்கு வந்தோம்.

கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு தேர்வு எழுதுவதற்கான இடம்  தரவில்லை. கல்லூரிக்குள் செல்லவும் எங்களுக்கு அனுமதி இல்லை. அதனால்தான் நாங்கள் எப்படி கிடைத்த இடங்கள் அமர்ந்து எங்களது தேர்வுகளை எழுதுகிறோம். வெளியில் அமர்ந்து தேர்வு எழுதுவதால் எங்களுக்கு பல்வேறு கஷ்டங்கள் ஏற்படுகிறது. முக்கியமாக கழிவறை இல்லாமல் பலர் சிரமப்படுகின்றனர். மழை வந்தால் மிகவும் மோசமான நிலை ஏற்படும். ஆகவே நாங்கள் அனைவரும் கல்லூரியில் தேர்வு எழுத அரசாங்கமும், கல்லூரி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கூறினர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் விசாரித்தபோது அதிகாரி ஒருவர், மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்வுகளை எழுத அறிவுறுத்தியுள்ளோம். விடைத்தாள்களை பதிவு தபால் மூலமாக அனுப்ப கூறியிருந்தோம். இருப்பினும் அவர்கள் இங்கு வருகின்றனர், என்றார். ஆனால் மதியம் 3 மணிக்குள் விடைத்தாள்களை கல்லூரியில் நேரடியாக கொடுக்க வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கல்லூரி நிர்வாகம் இதனை மறுக்கிறது.

Categories

Tech |