2020ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மீனவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் நாகை மாவட்ட மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2022ஆம் ஆண்டில் 200 லட்சம் டன் மீன் உற்பத்தியைப் பெருக்க இலக்கு எவ்வாறு நிர்ணயிக்கப் போகிறோம் என்பதை மத்திய அரசு தெளிவாக விளக்க வேண்டும் என்றும், 200 லட்சம் டன் உற்பத்தி என்பது பாரம்பரிய மீன்பிடித் தொழிலை நசுக்கிவிட்டு பன்னாட்டு கம்பெனிகளை வளர்த்தெடுக்கும் முயற்சி எனவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், சென்ற பட்ஜெட்டில் அறிவித்த நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் விசைப்படகு கட்டும் பணி என்ன ஆனது எனவும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அரசு அறிவிக்கும் திட்டங்கள் முழுமையாக செயல் வடிவத்திற்கு வருவதில்லை என குற்றம்சாட்டியுள்ள அப்பகுதி மீனவர்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் எந்தவித வரவேற்பும் இல்லை எனவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதேபோல் மத்திய பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள விவசாயிகள், அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போல பட்ஜெட் அமைந்திருப்பதாகவும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பிடுங்கிக்கொண்டு விவசாயிகளை பாதிக்கக்கூடிய திட்டங்களை அறிவித்துவிட்டு விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி அளிக்கவுள்ளதாகக் கூறுவது ஏமாற்று வேலை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.