பெண் டாக்டர் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள என்.ஜி.ஓ காலனி ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டாக்டரான பரிமளா என்ற மனைவி உள்ளார். இவர் தச்சநல்லூரில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பரிமளா வெளியூருக்கு சென்றிருந்தார். அப்போது பரிமளாவின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த 2 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் மற்றும் குத்து விளக்கு ஆகியவற்றை திருடிச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டில் நகை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.