14 பவுன் நகை வைத்திருந்த பை மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் காமராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளார். இவர் நெல்லை பாலபாக்யா நகரில் பழைய இரும்பு கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சதீஷ்குமார் தனது திருமண ஆல்பத்தில் மேலும் சில புகைப்படங்களை சேர்க்க திட்டமிட்டுள்ளார். அதற்காக வீட்டில் வைத்து புகைப்படம் எடுக்க வசதியாக ஒரு அறையில் இருந்த பீரோவை மற்றொரு அறைக்கு நகர்த்தி வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சதீஷ் குமாரும் அவருடன் பணியாற்றும் ஊழியர் ஒருவரும் சேர்ந்து பீரோவை மற்றொரு அறைக்கு நகர்த்தி வைத்தனர். இதற்கிடையே சதீஷ்குமாரின் மனைவியான கிறிஸ்டி பீரோவில் இருந்த 39 பவுன் நகைகளை இரண்டு தனித்தனிப் பைகளில் வெளியே எடுத்து வைத்திருந்தார். அதன்பின் புகைப்படம் எடுப்பதற்காக நகைகளை அணிவதற்காக அவற்றை தேடிய போது 14 பவுன் நகை வைத்திருந்த பை காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சதீஷ்குமார் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.