நகராட்சி அலுவலரை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பப்ளிக் ஆபீஸ் சாலையில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகை நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காடம்பாடி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோவிந்தராஜ் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த நகராட்சி பொறியாளரான ரவிச்சந்திரனிடம் வீட்டின் வரைபடம் குறித்து சந்தேகம் கேட்டுள்ளார். அதற்கு ரவிச்சந்திரன் கோவிந்தராஜனிடம் வீட்டின் வரைபடம் குறித்த சந்தேகத்தை உங்கள் வீட்டை வடிவமைப்பு செய்த பொறியாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் என கூறியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து அங்கிருந்த செல்வராஜ் கோவிந்தராஜை தட்டி கேட்டுள்ளார். இதனால் கோவிந்தராஜ் செல்வராஜை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செல்வராஜ் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிந்தராஜை கைது செய்துள்ளனர்.