பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்களில் பேரூராட்சி நிர்வாகத்தினர் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி போன்ற கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நேரங்களில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் கடைகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் இவர்கள் கடைவீதிகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் கிருமிநாசினி தெளிக்கின்றனர். இந்நிலையில் கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட காவல் நிலையம், நீதிமன்ற வளாகம், பேருந்து நிலையம், தாசில்தார் அலுவலகம் போன்ற பகுதிகளில் பேரூராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் வெளியில் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்ததோடு, அவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர்.