Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மூட்டு வலிக்கு மருந்து தரேன்” தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மூட்டுவலிக்கு மருந்து தருவதாக கூறி தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முகவரி தெரியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் லட்சுமணனின் வீட்டிற்கு அடிக்கடி வந்து பேசியுள்ளார். அப்போது இந்த தம்பதியினர் கை, கால் மூட்டுவலி அதிகமாக இருப்பதாக அந்த நபரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டதும் தான் ஒரு சித்த வைத்தியர் எனவும், மூட்டுவலி சரியாவதற்கு மருந்து தருகிறேன் எனவும் தம்பதிகளிடம் கூறியுள்ளார். அதன்படி வேப்பிலை, எலுமிச்சம் பழம் கலந்த ஒரு மருந்தை அந்த நபர் தம்பதிகளுக்கு கொடுத்துள்ளார். அதை குடித்த உடன் இருவரும் மயக்கம் அடைந்து விட்டனர். அதன் பின்  செல்லம்மாள் அணிந்திருந்த 6 கிராம் தங்க சங்கிலியை திருடி விட்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் தம்பதிகள் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அதன்பிறகு மயங்கிய நிலையில் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மயக்க மருந்து கொடுத்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |