மலேசிய தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு சிங்கப்பூர் அரசு தூக்கு தண்டனை விதித்துள்ள நிலையில், இரக்கம் காட்டி மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு அவரின் சகோதரி கோரிக்கை வைத்திருக்கிறார்.
மலேசிய நாட்டிலிருந்து கடந்த 2009 ஆம் வருடத்தில் 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞர் சிங்கபூருக்கு கடத்தியுள்ளார். அப்போது அங்குள்ள அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்நிலையில் சிங்கப்பூர் அரசு, நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த புதன்கிழமை அன்று அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே, தற்போது அவரின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், நாகேந்திரன் தர்மலிங்கத்தின் சகோதரியான ஷர்மிளா, தன் தம்பிக்கு சிங்கப்பூர் அரசு மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “சிங்கப்பூர் அரசு என் சகோதரரின் உயிரை காக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு அறிவுசார் இயலாமை பாதிப்பு இருக்கிறது. அவரின் உயிரைக்காக்க நாங்கள் பிரார்த்தித்து வருகிறோம். கடவுளின் அருளால் அதிசயம் நிகழும்.
என் சகோதரர் மற்றவர்கள் மீது அன்பு காட்டுபவர். அவர் கூச்ச சுபாவம் உடையவர். போதைப்பொருள் கடத்த அவர் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பார் என்று நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவரை சிறையில் பார்த்த போது, தன் அம்மாவை கவனிக்க விரும்புவதாக கூறினார்” என்று கூறிய ஷர்மிளா, சிறுவயதில் தன் சகோதரருடன் எடுத்த புகைப்படத்தை காண்பித்து, “என் தம்பி, வர வேண்டும்” என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார்.