மனைவியை பார்க்க சென்ற ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் நகை, பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி நகர் பகுதியில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தர்மராஜனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதனால் தனது மனைவியை பார்க்க தர்மராஜன் வீட்டை பூட்டி விட்டு அவரின் ஊருக்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் தர்மராஜன் வீட்டின் உள்ளே நுழைந்து பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதன்பின் வீட்டிற்கு வந்த தர்மராஜன் நகை மற்றும் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் ஆசிரியை வீட்டில் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.