நாளை (திங்கட்கிழமை ) முதல் 500 பேருந்துகள் இயக்குவதற்கு கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 500 பேருந்துகள் இயக்குவதற்கு கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றது. எனவே கடந்த மே மாதம் 10-ம் தேதி பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைய இருப்பதனால் தமிழக முதல்வர் திரு முக. ஸ்டாலின் 5-ம் தேதி வரை தளர்வுகள் அறிவித்து ஊரடங்கை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் பேருந்து போக்குவரத்து தொடங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் பேருந்து போக்குவரத்து நாளை முதல் துவங்க இருக்கின்றது.
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பேருந்து போக்குவரத்து தொடங்க இருப்பதனால் வெறிச்சோடிக் கிடந்த பணிமனைகள் அனைத்தும் நேற்று முதல் பரபரப்பாகியுள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல உயர் அதிகாரி கூறியபோது, நாளை முதல் அரசின் உத்தரவின்படி குமரி மாவட்ட பகுதிகளுக்கும், வெளிமாவட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. ஆனால் அரசு குறிப்பிட்டுள்ளபடி கொரோனா தொற்று அதிகம் உள்ள கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 11 மாவட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயங்குவதற்கு அனுமதி இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து நெல்லை, பாபநாசம், தூத்துக்குடி, திருச்செந்தூர், மதுரை ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் மண்டலத்தில் மொத்தமுள்ள 760 பேருந்துகளில் முதல் நாளில் 500 பேருந்துகளை இயக்க திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பயணிகளின் கூட்டத்தை பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த பேருந்துகளில் 50 சதவீத பணிகள் மட்டுமே பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கண்டக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு 3 பேர் அமரும் இருக்கையில் 2 பேரும், 2 பேர் அமரும் இருக்கையில் ஒருவரும் அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின் பயணிகள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பேருந்து பயணத்தின் போது பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் தற்போது காய்கறி சந்தை செயல்பட்டு வருவதனால் நாளை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்க இருப்பதனால் மாநகராட்சி அதிகாரிகள் அதனை அகற்றி தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று போக்குவரத்து கழக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.