அரசு ஊழியர் வீட்டில் இரவு வேளையில் மட்டும் பூக்கும் மலரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கூட்டுறவு நகர் குடியிருப்பு பகுதியில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் குமரன்-மல்லிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆவர். இவர்கள் தங்களுடைய வீட்டின் வெளிப்புறத்தில் பல வகையான பூ செடிகளை வளர்த்து வருகின்றனர். இவற்றில் பிரம்ம கமலம் எனும் அறியவகை பூ செடியில் உள்ள மலர்கள் பகலில் மொட்டுக்களாக இருந்து இரவில் மட்டும்தான் மலரும். இதுகுறித்து குமரன் கூறியபோது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றபோது இந்த பூச்செடியை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
இந்தச் செடியின் பூவானது இரவு 10 மணிக்கு மேல் மலர்ந்து நல்ல நறுமணத்துடன் அழகாக காட்சியளிக்கிறது. இதனயடுத்து பிரம்ம கமலம் என்று அழைக்கப்படும் இந்த மலரானது சாமிக்கு படைத்து வழிபடுவர். இதனை என்னுடைய வீட்டில் நட்டு வைத்து கடந்த 8 ஆண்டுகளாக பூத்துக் குலுங்குகிறது. அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் செடியில் ஓரிரு பூக்கள்தான் பூத்தது. ஆனால் இந்த வருடம் செடியில் பெரும்பாலான பூக்கள் பூத்து குலுங்குகிறது என்று குமரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு இரவில் பூக்கும் பிரம்ம கமலம் பூக்களை அப்பகுதியை சேர்ந்த பெரும்பாலானோர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.