யுஏஇ அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நமீபியா சூப்பர் 12 சுற்றை இழந்து வெளியேறியது..
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தகுதிச் சுற்றின் 10வது போட்டியில் இன்று நமீபியா மற்றும் யுஏஇ அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப்போட்டி ஜீலாங்கில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்குதொடங்கியது. இரு அணிகளுக்கும் இதுவே கடைசி தகுதிச் சுற்று ஆட்டமாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. எனவே யுஏஇ வெளியேறிவிட்டது. அதேநேரத்தில் நமீபியாவுக்கு இது முக்கிய போட்டி. இதில் வெல்லும்பட்சத்தில் சூப்பர் 12க்கு முன்னேறும்.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி யுஏஇ அணியின் தொடக்க வீரர்களாக முகமது வசீம் விருத்தியா அரவிந்த் இருவரும் களமிறங்கினர்.. இருவரும் மிக பொறுமையாக ஆடிவந்த நிலையில், 9ஆவது ஓவரில் அரவிந்த் 21 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.. அதன் பின் முகமது வசீம் மற்றும் சிபி ரிஸ்வான் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இதில் சிபி ரிஸ்வான் பொறுப்பாக விளையாட மறுமுனையில் முகமது வசீம் (50) அரை சதம் அடித்து ஆட்டம் இழந்தார்.. அதன் பின் வந்த அலிஷான் ஷரபு 4 ரன்களில் வெளியேற, 15 ஓவரில் 97/2 என அணியின் ஸ்கோர் மிக குறைவாக இருந்தது..
கடைசியில் சி.பி ரிஸ்வான் மற்றும் பசில் ஹமீட் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். ஜேஜே ஸ்மிட் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி என மொத்தம் 21 ரன்களை இருவரும் விளாசியதால் ஓரளவிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது. யுஏஇ 20 ஓவர் முடிவில்3 விக்கெட் இழந்து 148 ரன்கள் குவித்தது. சிபி ரிஸ்வான் 29 பந்துகளில் (3 பவுண்டரி, 1 சிக்ஸர்) 43 ரன்களுடனும், பசில் ஹமீட் 14 பந்துகளில் (2 பவுண்டரி, 2 சிக்ஸர்) 25 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்..
இதையடுத்து நமீபியா அணி 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மைக்கேல் வான் லிங்கன் 10 மற்றும் ஸ்டீபன் பார்ட் 4 என அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.. அதன் பின் வந்த நிகோல் லோஃப்டி-ஈடன் 1, ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் 16, ஜான் ஃப்ரைலின்க் 14, ஜேஜே ஸ்மித் 3, ஜான் கிரீன் 2 ரன்கள் என சீரான இடைவெளியில் பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை விட்டனர்.. இதனால் 12.4 ஓவரில் 69/7 என மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது நமீபியா.
இதற்கிடையே டேவிட் வைஸ் மட்டும் களத்தில் நின்று கொண்டிருந்தார். அதன் பின் ரூபன் டிரம்பெல்மேன் – டேவிட் வைஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். குறிப்பாக டேவிட் வைஸ் அதிரடியாக ஆடி தனி ஒரு ஆளாக போராடினார். இறுதியில் கடைசி 2 ஓவரில் நமீபியாவின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. அந்நேரத்தில் ஜாஹூர் கான் வீசிய 19வது ஓவரில் நமீபியாவால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் கடைசி ஓவரில் பரபரப்பு நிலவியது. வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் முஹம்மது வசீம் வீசிய முதல் பந்தில் 2, அடுத்தடுத்த பந்துகளில் 1 ரன்கள் எடுத்த நிலையில், 4ஆவது பந்தில் டேவிட் வைஸ் தூக்கி ஸ்ட்ரெய்ட்டாக அடிக்க அது எல்லைக்கோடுக்கு அருகே கேட்ச் ஆனது. வைஸ் அவுட்டானதும் நமீபியாவின் சூப்பர் 12 வாய்ப்பு முடிந்து விட்டது. 36 பந்துகளில் (3 பவுண்டரி, 3 சிக்ஸர்) 55 ரன்கள் எடுத்து அவுட் ஆன வைஸ் மிகவும் சோகமடைந்தார்.. அதன் பின் 2 பந்தில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், 2 ரன் மட்டுமே கிடைத்தது.
இறுதியில் நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் யுஏஇ அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரூபன் டிரம்பெல்மேன் 25 ரன்களிலும், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் 1 ரன்னிலும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.. யுஏஇ அணியில் அதிகபட்சமாக பாசில் ஹமீத் மற்றும் ஜாகூர் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்..
இந்த போட்டியில் நமீபியா வெற்றி பெற்றிருந்தால் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்திருக்கும். ஏற்கனவே அணி யுஏஇ அணி வெளியேறிய நிலையில், நமீபியாவும் தோல்வி அடைந்ததால் நெதர்லாந்து அணியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.. ஏனென்றால் தற்போது குரூப் ஏ பிரிவில் ஸ்ரீலங்கா மற்றும் நெதர்லாந்து இரு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு சென்று விட்டது.
Sri Lanka and Netherlands have some massive fixtures lined up in the Super 12 after sealing their qualification 👊🏻
Check out the updated fixtures in the Super 12 👉🏻 https://t.co/VlX3uCYXxn#T20WorldCup pic.twitter.com/iUw44ur5Rp
— ICC (@ICC) October 20, 2022