தான் அமெரிக்க ஜனாதிபதி ஆனால் எல்லை பிரச்சினையில் இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படுவேன் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிட உள்ளார். துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றார். இந்தியாவின் 74வது சுதந்திர தின விழா நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ” கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுடன் சிவில் அணு ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கு முன்னணியில் இருந்த நான் தான் பணியாற்றினேன். அப்போது நான் கூறும்போது, இந்தியாவும், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளாக மாறினால் மற்றும் கூட்டாளிகளாக இருந்தால் இந்த உலகம் பாதுகாப்பானதாக மாறும் என்று கூறினேன். நான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால், இந்த வார்த்தையை நான் தொடர்ந்து காப்பாற்றுவேன். இந்தியா தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும் உள்நாட்டு பிரச்சனை, எல்லைப் பிரச்சனை மற்றும் அச்சுறுத்தல்களில் அந்நாட்டிற்கு நாங்கள் ஆதரவாக செயல்படுவோம்.
இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கை மற்றும் பெரிய சவாலாக இருந்து கொண்டிருக்கும் பருவநிலை மாற்றம், உலக சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்போம். அது மட்டுமன்றி இரு நாடுகளிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு உழைப்போம். ஏனென்றால் இரு நாடுகளின் பன்முகத் தன்மைதான் பரஸ்பர வலிமை. இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை நாளும் அதிகரிக்கும். மேலும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நட்புறவும் வளரும்” என்று அவர் கூறியுள்ளார்.