பூ வியாபாரி கொலை வழக்கில் நண்பரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பி.மேட்டுப்பாளையம் தமிழன் வீதி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆப்பக்கூடல் பகுதியில் பூக்கடை ஒன்று நடத்தி வந்தார். கடந்த மே மாதம் 15-ஆம் தேதி நாகராஜ் தலையில் ரத்த காயங்களுடன் பவானி ஆற்றங்கரையோரம் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது நாகராஜ் தலையில் யாரோ மர்ம நபர்கள் கல்லை போட்டு கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நாகராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின் மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையில் கொலை வழக்கு தொடர்பாக கவுந்தப்பாடி ரோடு பழைய காவல்நிலையம் அருகில் வசித்து வரும் சண்முகம் என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சண்முகம் கூறியதாவது “எனக்கு திருமணம் முடிந்து ஆப்பக்கூடல் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறேன். நான் அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடிக்க செல்வேன். அதேபோன்று நாகராஜும் அங்கே வந்து மது குடிப்பார்.
இதனைத்தொடர்ந்து எனக்கும் நாகராஜுக்கு இடையில் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம். இந்நிலையில் நாகராஜ் என்னை அடிக்கடி ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு கட்டாயப்படுத்தினார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்தும் நாகராஜ் என்னை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதன் காரணமாக நான் நாகராஜை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி நான் பவானி ஆற்றுங்கரையோரம் நாகராஜை அழைத்துச் சென்று அவர் தலையில் கல்லை போட்டதோடு தண்ணீரில் தள்ளி விட்டேன். இதனால் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்” என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன்பிறகு காவல்துறையினர் சண்முகத்தை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.