கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் கவரத்தெருவில் திவாகர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 13- ஆம் தேதி எசையனூர் கிராமத்திற்கு நண்பரைப் பார்ப்பதற்காக பாலாறு வழியாக சென்றுள்ளார். அப்போது பாலாற்றில் இருந்த வாலிபர் ஒருவர் திவாகரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து திவாகர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில், காவல்துறையினர் காவேரிப்பாக்கம் அத்திப்பட்டி இ.பி அலுவலகம் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பனப்பாக்கம் திருமால்பூர் சாலையைச் சேர்ந்த கண்ணன் என்றும், இவர் திவாகரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் கண்ணனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 500 ரூபாய் பறிமுதல் செய்தனர்.