நண்பனை கொலை செய்ததற்காக வாலிபருக்கு ஆயுள்கால தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூலாங்கினர் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் ஜெயசிம்மன் என்பவரும் வசித்து வந்துள்ளார். எனவே நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 9.8.2017 அன்று இரவு அரவிந்தன் வீட்டிற்கு அருகில் வைத்து மது குடித்துள்ளனர். அப்போது அரவிந்தன் ஜெயசிம்மன் தாயார் பற்றி தவறுதலாக பேசியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஜெயசிம்மன் கிரைண்டர் கல்லை எடுத்து அரவிந்தன் தலையில் போட்டு படுகொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயசிம்மனை கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்த வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவ்வாறு அரவிந்தனை கொலை செய்ததற்காக ஜெயசிம்மனுக்கு ஆயுள்கால தண்டனையும், 1,000 ரூபாய் அபராதம், கொலை செய்த தடயத்தை அழிப்பதற்காக முயற்சி செய்ததால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதமும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்கவும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ரூபன் என்ற அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி வாதாடினார்.