ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது .
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் அனைவரும் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் அனைவரும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தங்களின் பைபர் படகு மற்றும் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடிதொழில் செய்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆறுகாட்டுத்துறை கிராமத்தில் நேற்று தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றது.
இதனால் அப்பகுதியில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று அக்கிராம பஞ்சாயத்தார் அறிவித்துள்ளனர். இதையடுத்து ஆறுகாட்டுத்துறை கிராம மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் ஆர்வமுடன் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒருநாளில் மட்டும் 700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது ,என்றும் மீதமுள்ள மீனவர்களுக்கு இன்னும் ஒருசில தினங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.