நங்காஞ்சியாறு அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தாலுகாவில் நங்காஞ்சியாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 39.37 அடியாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் திண்டுக்கல் மற்றும் கரூரில் பல பகுதிகள் பாசன வசதி பெற உதவுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழையால் அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் பாசன வசதிக்காக நீரை திறந்து விடும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்பேரில் நங்காஞ்சியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி, கரூர் கலெக்டர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை அணையிலிருந்து திறந்து வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து கலெக்டர் விஜயலட்சுமி செய்தியாளர்களிடம் பேசியபோது “நங்காஞ்சியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மார்ச் 15ஆம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் பாசனத்திற்காக திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வளையப்பட்டி, சின்னக்காம்பட்டி, இடையகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2615 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.
அதேபோல் கரூர் மாவட்டத்தில் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள இருக்கும் 3635 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதன்படி மொத்தம் 6 ஆயிரத்து 250 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக செலவழித்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று அவர் கூறியுள்ளார். இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர்கள் சுஜாதா, சரஸ்வதி, சிவப்பிரகாசம் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.