பிரபல காமெடி நடிகர் வடிவேலு தனது நண்பருடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் வடிவேலு தன் நண்பர் இயக்கக்கூடிய படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வடிவேலு புகழ் பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறார். “இம்சை அரசன் 24-ம் புலிகேசி” என்ற படத்தின் மூலமாக வந்த சர்ச்சை காரணத்தால் தற்போது திரையுலகை விட்டு சற்று விலகியே உள்ளார். கடைசியாக நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக 2017ஆம் ஆண்டில் நடித்துள்ளார். மேலும் சென்ற இரண்டு ஆண்டுகளாகவே இவர் நடிப்பில் எத்தகைய திரைப்படமும் வெளிவரவில்லை. நடிகர் வடிவேலு நடித்துள்ள படங்களில் இயக்குனர் சுந்தர் சி, சுராஜ் இயக்கத்தில் உருவான படங்கள் உடைய காமெடியானது தற்போது வரையிலும் அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் சுராஜ் இயக்கத்தின் மூலம் வெளியாகிய ‘தலைநகரம்’, ‘மருதமலை’ போன்ற படங்களில் உள்ள வடிவேலு காமெடிக்கு இன்று வரையில் பல மீம்ஸ்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இயக்குனர் சுராஜ் மற்றும் நடிகர் வடிவேலு இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். இதனைத் தொடர்ந்து சுராஜ் இறுதியாக இயக்கிய ‘கத்திச்சண்டை’ திரைப்படத்தில் வடிவேலு நடித்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் சுராஜ் அவர்கள் படம் முழுவதும் நடிகர் வடிவேலுவை நாயகனாகக் கொண்டு கதையை எழுதியுள்ளார். இப்படம் தொடர்பாக வடிவேலு, சுராஜ் இருவரும் பேசி படம் பண்ணலாம் என முடிவெடுத்து இருக்கின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இவர்கள் கூட்டணியில் உருவாகக்கூடிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.