பிளாஸ்டிக் நாப்கின்களுக்கு பதிலாக புளிச்ச கீரை தண்டை கொண்டு நாப்கின்களைத் தயாரித்து இளம் தொழிலதிபர்களான நிவேதாவும்,கௌதமும் அசத்திவருகின்றனர்.
சாதாரண நேரங்களில் ஆண்களைவிட அதிக அளவில் வேலைசெய்துவரும் பெண்கள், மாதவிடாய் நேரங்களில் மட்டும் சுருண்டுபோவது இயற்கையே. பெரும்பாலான பெண்கள் இதனை ஒரு சாப கேடாகவே பார்க்கிறார்கள், அதற்கான காரணம் மாதவிடாய் என்பது `அசுத்தம்’ என்று கூறிய பழைமைவாத கருத்துகளே, தற்போது அதனை ஒரு உடல்நிலை மாற்றம் என்பதை அனைவரும் உணரத் தொடங்கியிருந்த போதிலும், அந்த சமயங்களில் உடல் வலியையும்,
மன அழுத்தத்தையும் சந்திக்கும் பெண்கள் மாதவிடாய்க்காக பயன்படுத்தும் சாதாரண நாப்கின்களால் கூடுதலாக சில பாதிப்புகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக பெண்கள் உபயோகிக்கும் நாப்கின்களில் 80 % பிளாஸ்டிக் இருக்கும். இதனால் ஒரு நாப்கின் முழுவதுமாக மக்குவதற்கு 600 முதல் 900 ஆண்டுகள் தேவைப்படும். இப்படி பிளாஸ்டிக் ரசாயனம் கலந்து உருவாகும் நாப்கின்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் புற்றுநோய் முதல் பல தொற்று வியாதிகள் ஏற்பட காரணமாக அமைகின்றன.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் நாப்கின்களிலிருந்து நம்மை பாதுகாக்க Kenaf fibre எனப்படும், புளிச்ச கீரை தண்டில் நாப்கின் தயாரித்து கோவையை சேர்ந்த பெண் ஒருவர் அசத்தியுள்ளார். கோயம்புத்தூரை சேர்ந்த பேஷன் டெக்னாலஜி படித்து விட்டு தொழில் செய்ய நினைத்த நிவேதா, கௌதம்.இவர்கள் கல்லூரியில் ஒரு ஆராய்ச்சிகாக புளிச்ச கீரை விவசாயம் செய்யும் விவசாயிகளை சந்தித்தனர்.
அப்போது இந்த கீரையின் இலைகள் உணவிற்கு பயன்படும், அதன் தண்டுகள் வீணாக கீழே கொட்டப்படும் என விவசாயிகள் அவர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் ஃபேஷன் டெக்னாலஜி மாணவர்கள் என்பதால் அந்த நாரில் என்ன உடை நெய்யலாம் என யோசித்த அவர்கள் புளிச்ச கீரை தண்டிலிருந்து நாரினை எடுத்து அதைத் துணியாக்கி ஆடை வடிவமைத்தனர்.
அதன் பிறகு அந்த துணிகள் நல்ல உறிஞ்சும் சக்தியையும், நுண்ணுயிரிகளை கொல்லக்கூடிய திறனையும் கொண்டிருப்பது தெரியவந்ததையடுத்து இதை சானிடரி நாப்கின்களாக பயன்படுத்தலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. அதன்பின் பல ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு 100% மூலிகைகளால் ஆன சானிடரி நாப்கின் உருவாக்கினர். மேலும் வெளியே மிருதுவாக தோலை பாதிக்காத வண்ணம் இந்த நாப்கின்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.