ராமநாதபுரம் அரண்மனை முன்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜக அரசின் பொருளாதார சீரழிவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் பங்கேற்று தலைமை தாங்கினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் தத், ‘மோடி அரசால் அனைத்து துறைகளும் பின்னோக்கிச் செயல்பட்டுவருகிறது. இதனால் மக்களும் பொருளாதார ரீதியாக பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் ஏழைகள் மிகவும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மிகப் பெரிய பணக்காரர்களாகவும் மாறிக் கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு இடையிலான இடைவெளி நீண்டு கொண்டே இருப்பதாகத் தெரிவித்தார். அதேபோல் வேலைவாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே மோடி அரசு செய்துள்ள சாதனை’ என்றார்.
மேலும் அவர், ‘இந்தியாவின் ஜிடிபி 5%ஆக இருப்பதாக ஆளும் மோடி அரசு தெரிவித்தது. அதுவும் அவர்கள் பயன்படுத்தும் புதிய கணக்கீடு முறையினால், வழக்கமாக பயன்படுத்தும் கணக்கீடு முறையில் பார்த்தால் இந்தியாவின் ஜிடிபி 2% மட்டுமே இருக்கும். மோடி அரசு ரிசர்வ் வங்கி, உளவுத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளையும் தன்னிச்சையாக செயல்பட விடாமல் தலையிட்டு வருகிறது’ என கூறினார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி தோல்வி அடைந்ததுக்கான காரணம் குறித்து கேட்டபோது, ஆளும் அதிமுக அரசு பணபலம், அதிகார பலம், ஆட்கள் பலத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. இது வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்காது, மக்கள் தெளிவாக உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி மிகப் பெரிய அளவில் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற மோடி சீன அதிபருடனான சந்திப்பு ஒரு விளம்பர நோக்கம். மோடி தலைப்புச் செய்தியை வடிவமைப்பதில் மிகவும் வல்லவர், அதற்கான வித்தைகளை நன்கு கற்றறிந்தவர். அதனால் தலைப்பு செய்தியை வடிவமைப்பதைத் தொடர்ந்து வருகின்றார் எனவும் சஞ்சய் தத் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் காங்கிரஸ் தலைவர் தேவேந்திரன், முதுகுளத்தூர் எம்எல்ஏ மலேசியா பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.