பணி நீட்டிப்பு மற்றும் பாக்கி சம்பளத்தை வழங்க கோரி தற்காலிக நர்சுகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிக்காக 143 நர்சுகள், 20 சுகாதார ஆய்வாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென பணிக்கு வர வேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தற்காலிக நர்சுகள், சுகாதார ஆய்வாளர்கள் பணி நீட்டிப்பு வழங்க கோரி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சுகாதார பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் சதீஷ்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அப்போது பாக்கி இருக்கும் சம்பளத்தை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் பணியை நீட்டிக்க எனக்கு அதிகாரம் இல்லை அரசு தான் முடிவு செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதை பெற்றுக்கொண்ட கலெக்டர் உங்களுக்கு சம்பளம் உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணி நீட்டிப்பு குறித்து மருத்துவதுறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிப்பதாகவும் கலெக்டர் தெரிவித்துள்ளார். அதன்பின் நர்சுகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.