கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக புயல், மழை உள்ளிட்ட காலநிலை சம்பந்தமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இந்த பிரச்சனை நமது நாட்டில் மட்டுமல்லாமல், உலக அளவில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து நாசா நிறுவனம் தற்போது எச்சரிக்கை விடுக்கும் படி பதிவு ஒன்றை அவர்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், பூமியைச் சுற்றிலும் பல்வேறு வழிகளில் கடுமையான வெப்பம் வெளியேறுகிறது.
மற்ற வருடங்களை காட்டிலும் தற்போது பூமி அதிக வெப்பமடைந்து வருகிறது. இந்த கடுமையான வெப்பத்தை ஆஸ்திரேலியா, சைபீரியன் ஆர்க்டிக் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட வெப்ப நிலையின் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். குறிப்பாக ஆர்டிக் பகுதி மற்ற பகுதிகளை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக வெப்பம் அடைந்துள்ளது.
இதன் காரணமாக கடலில் வெப்பத்தின் தன்மை அதிகரித்து இதுவரை இல்லாத அளவிற்கு அண்டார்டிக் மற்றும் பெருங்கடல் பகுதிகளில் அதிக வெப்ப மண்டல புயல்கள் பதிவானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால்,
மனிதர்களாகிய நாம் அதிக அளவு கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களை வெளியிட்டு காலநிலையில் அபாயகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதே என பதி விட்டுள்ளது. சமீப நாட்களாக உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பல பிரபலங்கள் காலநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்த்தும் வகையில் பல இடங்களில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.