அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் மிளகாய் பயிரிட்டு சாதனை படைத்திருக்கிறது.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது, மற்ற கோள்களில் மனிதர்களை தங்க வைக்கும் முயற்சியாக, அங்கு பயிர்கள் வளர்க்க முடியுமா? என்ற ஆய்வை தொடங்கியது. அதன்படி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், மிளகாயை பயிரிட்டு சோதனை செய்யப்பட்டது. இதற்கென்றே சிறப்பாக “Advanced Plant Habitat” என்ற கருவி நாசாவால் உருவாக்கப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில், இந்த கருவியை நிறுவி, பூமியில் இருப்பதை போல மிளகாய் வளர்வதற்கு ஏற்ப ஒளி, வெப்பம், நீர் உரம் ஆகியவை இதன்மூலம் பெறப்பட்டது. அதன்பின்பு களிமண் கலவையால் தளம் அமைக்கப்பட்டு அதில் மிளகாய் விதைகள் தூவப்பட்டது. மிளகாய் செடி வளர்கிறதா? என்பதை 180 சென்சார்கள் கண்காணித்து வந்தது.
மேலும் அதற்கு தேவையான அனைத்தும் வழங்கப்பட்டது. எனவே மிளகாய்ச் செடி நன்றாக வளர தொடங்கியது. நான்கு மாதங்களில் அறுவடை செய்துவிடலாம். இது தொடர்பில் ஆய்வாளர் கூறியிருப்பதாவது, விண்வெளி நிலையத்தில் மிளகாயை வளர வைத்துள்ளோம். நாசாவின் அனுமதி பெற்ற பின்பு, அதனை விண்வெளி வீரர்கள் அறுவடை செய்யவுள்ளார்கள்.
அவர்களுக்கு தேவையானது போக மீதமுள்ளவற்றை பூமிக்கு அனுப்புவார்கள். அதனை வைத்து பூமியிலுள்ள மிளகாய்க்கும், இதற்கும் வித்தியாசம் உள்ளதா? என்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். பூமியை போன்று வேறு கோள்களிலும் வாழ நினைக்கும் மனித இனத்திற்கான ஆய்வில் இது மிக முக்கியமானது.
இதனையடுத்து, பழங்கள், காய்கறிகள் போன்றவையும் விளைவிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அது நன்றாக விளைந்தால் செவ்வாய் போன்ற மற்ற கோள்களில் வாழ நினைக்கும் மனிதர்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையம் சாதாரண இடமாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.