வெண்ணாற்றின் பகுதியில் நடைபாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை ஊராட்சிக்குட்பட்ட வெண்ணாற்று கரையின் ஒரு பகுதியில் கோட்டூர், காந்தாவனம் ஆகிய கிராமமும் மறுகரையில் மூங்கிலடி, நெட்டாநல்லூர், எடவாக்குடி ஆகிய கிராமமும் அமைந்துள்ளது. இந்நிலையில் காந்தாவனம்பகுதியில் அமைந்துள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றுவர மூங்கிலடி, நெட்டாநல்லூர், எடவாக்குடி கிராம மக்களுக்கு சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து எடவாக்குடி பகுதியில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு வெண்ணாற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி கிராம மக்கள், தொழிலாளர்கள், பெண்கள் செல்கின்றனர். எனவே எடவாக்குடி ஊராட்சித் தலைவர் விஜயகுமார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வெண்ணாற்றின் பகுதியில் நடைபாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.