ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது போட்டியில் விளையாட இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன் சிறப்பாக விளையாடி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் ஒருநாள் தொடரை 1-2 என்ற நிலையில் தோற்றாலும், டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதுவரையிலும் டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. இந்நிலையில் நாளை 3வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
இதில் இந்திய அணியிலிருந்து மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். மேலும் காயம் காரணமாக உமேஷ் யாதவ் விலகி உள்ளார். இதனால் நடராஜனுக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரோகித் சர்மா,சைனி ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் நடராஜன் இடம்பெறவில்லை. இருப்பினும் நான்காவது டெஸ்டிலாவது நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களே ஆசையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.