நடிகர் கார்த்தியின் “சர்தார்” திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “சர்தார்”. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். “சர்தார்” திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது.
இதில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் கூறியதாவது, “இந்த திரைப்படத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், நிறைய மெனக்கெடல் இருந்தது. நிறைய உழைக்க வேண்டியிருந்தது. அதற்கு முதல் காரணம் லக்ஷ்மன் சார் தான். எல்லாத்தையும் தாண்டி நம்பிக்கை வைக்க வேண்டும். இவ்வளவு பணம் செலவு செய்து படம் எடுக்கிறோம் என்றால் அதற்கு தேவையான நம்பிக்கையை அவர் தான் கொடுத்தார். இரவும் பகலுமாக வேலை செய்துள்ளோம்.
கார்த்தி சார் நான் உங்களை மிகவும் சிரமப்படுத்தியுள்ளேன். ஏனென்றால், ஏகப்பட்ட வித்யாசமான தோற்றங்கள் அவருக்கு இருந்தது.
ஒவ்வொரு தோற்றத்திற்கும் ஏற்றவாறு தயாராக வேண்டும். இதுவரை நான் வேலை பார்த்த நடிகர்களை விட கார்த்தி சாருக்கு அவரின் நடிப்பின் மேல் ஈடுபாடு அதிகம். அவருடைய உடை, முடி, மேக்கப் அனைத்திலும் அவர் கவனத்துடன் இருப்பார். அது எனக்கொரு பயம் தந்தது. நாம் அதை விட்டுவிடக் கூடாது என்ற ஒரு எண்ணத்தை தந்தது. அவருடைய ஒத்துழைப்பும், சிரமமும் எனக்கு ஊக்கமளித்தது.
இந்தத் திரைப்படத்தில் வில்லனை மிகவும் வலிமையான கதாபாத்திரமாக இருக்க வேண்டுமென்று நினைத்தோம். அப்போது தான் “பேகம் ஜான்” என்ற படத்தைப் பார்த்தேன். அதில் சங்கி பாண்டே சார் வில்லனாக நடித்திருந்தார். அதன் பின்னர் அவரிடம் கேட்டபோது அவர் உடனே ஒப்புக் கொண்டார். அவருக்கு அந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்கு அவருக்கு நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.