புதுச்சேரியில் வங்கி வேலைக்கு செல்வதற்கான நற்சான்றிதழ் பெற இளைஞர் தேசிய கீதம் பாடினார்.
பொதுவாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கோ அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் அல்லது துறைகளில் வேலை செய்வதற்கோ அதேபோல் வங்கிகளில் வேலை செய்வதற்கோ தங்கள் வீடுகளுக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் நற்சான்றிதழ் கட்டாயம் பெறவேண்டும். அந்த வகையில், புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் வங்கியில் வேலைக்குச் சேர தேவையான நற்சான்றிதழ் கேட்டு லாஸ்பேட்டை காவல் நிலையத்தை அணுகி உள்ளார்.
அங்குள்ள காவலர்கள் அவரை தேசிய கீதத்தைப் ஒருமுறை தவறாமல் பாடினால்தான் நற்சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்க, முதல் முறை தவறாக பாடிய அந்த இளைஞர் இரண்டாவது முயற்சியில் தேசிய கீதத்தை சரியாக பாடி நற்சான்றிதழ் பெற்றார். தற்போது அந்த சான்றிதழை கொண்டு அவர் வங்கியிலும் வேலைக்கு சேர இருக்கிறார். இளைஞர் மத்தியில் தேசபற்றை வளர்க்க காவல் துறை அதிகாரிகள் எடுத்த முயற்சிக்கு பொதுமக்கள் சார்பில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.