ரஷ்ய தாக்குதலில் துருக்கி வீரர்கள் உயிரிழந்ததற்கு நேட்டோ அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் துருக்கிக்கு ஆதரவாக கூடுதல் படைகளை அனுப்ப மறுத்துவிட்டது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தை எட்டியிருக்கின்ற நிலையில், இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரியாவுக்கு ரஷ்யா ஆதரவளிக்கின்றது. அதேபோல துருக்கி குர்திஷ் போராளிகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. தற்போது இரு பிரிவினரும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில் இட்லிப் மாகாணத்தில் சிரிய-ரஷ்ய கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 34 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா உட்பட 29 நாடுகளை உள்ளடக்கியிருக்கும் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள துருக்கி, இந்த விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்துவதற்கு அந்த அமைப்பிற்கு கோரிக்கை விடுத்தது.
அதன்படி, பெல்ஜியத்தில் இருக்கும் தலைமையகத்தில் நடைபெற்ற நேட்டோ அவசர ஆலோசனைக் கூட்டத்தில், இறந்த துருக்கி வீரர்களுக்கு அனுதாபம் அளிக்கப்பட்டது. ஆனால் துருக்கிக்கு கூடுதல் படைகளை அனுப்ப எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.