மத்திய அரசு, 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கியிருக்கும் நிலையில், தமிழ் நாட்டை ஒதுக்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நாட்டில் கடந்த வருடம் நிலச்சரிவு, புயல் மற்றும் பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் மத்திய பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், கர்நாடகா மற்றும் அசாம் போன்ற 6 மாநிலங்கள் பாதிப்படைந்தது. எனவே, மத்திய அரசு அம்மாநிலங்களுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக நிதி ஒதுக்கியிருக்கிறது.
இதில் 5 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் அதிக அளவில் பாதிப்படைந்த தமிழ்நாடு இதில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் பேரிடர் நிவாரண தொகை போன்றவற்றில் தொடர்ந்து தமிழ்நாட்டை ஓரம் கட்டி வருகிறது. மேலும், நீட் விலக்கு தொடர்பில் தமிழக அரசு, உள்துறை அமைச்சரை சந்திக்க முயன்றும் அதற்கான நேரம் கொடுக்கப்படவில்லை.
மேலும் நகர்ப்புறங்களில் உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால், மத்திய அரசு வழங்கக்கூடிய நிவாரண நிதியை, திமுக அரசு, பொங்கல் பரிசாக மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு, தகுந்த நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே திமுக அரசு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.
இதற்கு முன்பு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட சேதங்களை சரிப்படுத்த 6230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசுக்கு பல தடவை கடிதம் அனுப்பியும், மத்திய அரசு அதனை புறக்கணித்திருக்கிறது. எனினும் தமிழகத்தில், திமுக அரசு பொருளாதார நெருக்கடியில் மீளவும், மக்களுக்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் தகுந்த முடிவு கிடைக்கவும் மத்திய அரசின் ஆதரவு தேவை என்பதால் பொறுத்துக் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.