தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் அனைவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவை சிறப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். இந்த தைத்திருநாள் அல்லது பொங்கல் திருவிழாவிற்கு பல்வேறு கதைகள் கூறப்படுவது உண்டு. பெரும்பாலும் இந்நாளை இந்துக்கள் மட்டுமே புத்தாடை அணிந்து அதிகமாக கொண்டாடி வருகிறார்கள்.
ஆனால் உண்மையாகவே மதத்தை கடந்து ஐம்பூதங்களின் வழிபாடாக பொங்கல் பண்டிகை உள்ளது. காற்றின் உதவியுடன் எரியும் நெருப்பில், மண்ணால் செய்யப்பட்ட பானையில், தண்ணீரை ஊற்றி அதில் பச்சரிசி பொங்கல் வைத்து ஆகாயத்திலுள்ள சூரியனுக்கு படைப்பதே பொங்கல் பண்டிகை. நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகியவற்றின் உதவியுடன் மனிதனின் பக்குவப்பட்ட இந்த வாழ்வை நினைவு கூறும் விழாவாகவும் இது கூறபடுகிறது. எனவே இது குறிப்பிட்ட மதத்திற்கான பண்டிகை கிடையாது அனைவருக்குமான பண்டிகை.