இயக்குநர் நவீன் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விகாஷ், நடிகை மதுமிதா நடித்திருக்கும் படம் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’. மேலும் இப்படத்தில் டெல்லி கணேஷ், சித்ரா, ராகுல் தாத்தா, விஜய் டிவி ராமர், நாஞ்சில் விஜயன், அம்பானி சங்கர், நெல்லை சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ்.எச்.மீடியா ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் சாகுல் அமீது தயாரித்துள்ளார்.
இப்படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன் சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் இயக்குனர் பேரரசு நடிகை சித்ரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இந்த படத்தில், 22 வருடங்களுக்குப் பிறகு நடிகை சித்ரா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் 12 நாட்களில் முடித்துள்ள நவீன் மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள்.
படத்தின் பட்ஜெட் அதிகரிப்பதற்கு இயக்குநர்களிடம் சரியான திட்டமிடல் இல்லாததும், அதனால் படப்பிடிப்பு நாட்கள் அதிகரிப்பதும் தான் காரணம், என்று பல தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், நவீன் மணிகண்டனின் இந்த படப்பிடிப்பு மிகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படத்தின் இயக்குநர் நவீன் மணிகண்டன் பேசுகையில், சினிமா துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றினாலும், கேமரா உதவியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றியிருக்கிறேன். இதனால், பல இயக்குநர்கள் பணியாற்றுவதை பார்த்திருக்கிறேன். அத்துடன், படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு, எப்படி தயாராக வேண்டும், என்பதிலும் தெளிவாக இருந்தேன்.
அதனால் தான் 12 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க முடிந்தது. இந்த படம் இளைஞர்களுக்கான படம். குடும்பத்துடன் பார்க்கும் படம். பொறுப்பில்லாமல் இருக்கும் ஹீரோவை திருத்த அவரது அப்பா பல முறை முயற்சித்தாலும் நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் அதே அப்பாவுக்காக ஹீரோ பொறுப்பானவராக மாறுகிறார், அதற்கு அவரது காதலியும் ஒரு காரணமாக அமைகிறார், அது எப்படி என்பது தான் கதை.
ராகுல் தாத்தா, விஜய் டிவி ராமர் ஆகியோர் காமெடியில் தனி முத்திரை பதிப்பார்கள். சாதாரணமான கதையாக இருந்தாலும், படம் ரசிகர்களை எண்டர்டெயின் பண்ணக்கூடிய விதத்தில் சிறப்பாக வந்திருக்கிறது என்றார்.