வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(19). இவர் நந்தனம் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஸ்ரீதரன் கல்லூரியை முடித்து விட்டு நேற்று வழக்கம் போல், சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது ஷாகுல் ஹமீது (20) என்பவர் அவரை கத்தியால் குத்த துரத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன், அவரிடமிருந்து தப்பித்துக்கொள்ள ஓடினார். இதைப் பார்த்த ரயில்வே துறை காவலர்கள், ஷாகுல் ஹமீதை பிடித்து பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் புதுக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஷாகுல் ஹமீது மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவனை குத்த சகமாணவனே கத்தியைத் தூக்கிக் கொண்டு துரத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.