2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கொரோனா வைரஸ் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர் கொரோனா வைரஸ் தாக்கம் நாளும் நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒடிஷா, சத்தீஸ்கர் சட்டபேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எல்லோரையும் தனிமைப்படுத்த சொல்லி விட்டு, நாம் கூட்டமாக அமர்ந்து பேசலாமா? என கேள்வி எழுப்பிய அவர், தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எனது தலைமையில் நான்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தலைமைச்செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் பயணிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார். மேலும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.