கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள் என்று தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் 154 நாடுகளில் வேகமாக பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. மேலும், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2,800க்கு மேற்பட்டோரும், ஈரானில் ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பீதியால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் அனைத்துமே தங்களது நாட்டில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், கிளப்புகள், கேளிக்கை அரங்கங்கள் என பல்வேறு முக்கிய இடங்களை மூடியுள்ளது. அதேசமயம் இதுபோன்ற நடவடிக்கைகளால் சில நாடுகளில் சராசரியான பண நடமாட்டமும் அரசின் வருமானமும் சுருங்கிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள சுமார் 2 1/2 கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள் என்றும், இதன் எதிரொலியாக 3,40,00,000 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமானத்தை இழக்க நேரிடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.