நீச்சல் பழகுவதற்காக கிணற்றுக்கு சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்-அய்யம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும் தனுஷ் என்ற மகனும் உள்ளனர். தனுஷ் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக தனுஷ், பிரியதர்ஷினி மற்றும் மேலும் 2 பேர் என நான்கு பேர் சேர்ந்து கிணற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது தனுஷிற்கு அவரது சகோதரி இடுப்பில் சேலையை கட்டி நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார்.
நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது தனுஷ் தானே நீச்சலடிக்க போவதாகவும் இடுப்பில் கட்டியிருந்த துணியை அவிழ்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை கேட்டு அவரது சகோதரி இடுப்பில் உள்ள துணியை அவிழ்த்து விட்டுள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக தனுஷ் நீருக்குள் மூழ்கி உள்ளார்.
இதனை கண்டவர்கள் தனுஷின் குடும்பத்தினருக்கும், தீயணைப்பு துறை வீரர்களுக்கும் தகவலை தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தனுஷை மீட்க போராடினார்கள். கிணற்றின் ஆழம் 70 அடியாக இருந்தது. மேலும் கிணற்றில் தண்ணீர் மேலே வரை நிரம்பியிருந்ததால் தனுஷை உடனடியாக மீட்க முடியவில்லை. சுமார் 4 மணி நேர பெரும் போராட்டத்திற்கு பிறகு தனுஷ் சடலமாக மீட்கப்பட்டார் .