திமுக கட்சியின் எம்பி ஆர் ராசா இந்துக்கள் குறித்து பேசியது சமீபத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு பாஜகவினரும், இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனையே ஓயாத நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்களுக்கு பஸ்ஸில் ஓசி பயணம் என்று கூறியது அடுத்த சர்ச்சையாக வெடித்தது. இதனால் தற்போது பல்வேறு பகுதிகளில் பேருந்தில் செல்லும் பெண்கள் நாங்கள் இலவசமாக பயணம் செய்ய மாட்டோம் என்று கூறி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணத்தை கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொள்கின்றனர்.
இது தொடர்பான செய்திகளும் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் அமைச்சர் பொன்முடி நான் விளையாட்டுக்காக தான் அப்படி கூறினேன். அதை சிலர் பெரிய பிரச்சினையாக மாற்றி விட்டார்கள் என்று விளக்கம் அளித்தார். அதன் பிறகு சர்ச்சையாக பேசுபவர்கள் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தார்கள்.
இதன் காரணமாக திமுக கட்சியை சேர்ந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது கடுமையான எச்சரிக்கையை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சொல்லிலும் செயலிலும் கவனம் தேவை என முதல்வர் எச்சரித்துள்ளார். நம்முடைய தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ சிறிதளவு கூட இடம் கொடுக்கக் கூடாது. அப்படியே ஏதாவது ஒரு நிகழ்வுகள் என்னுடைய கவனத்திற்கு வரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று கண்டிப்புடன் கூறியதாக கூறப்படுகிறது.