திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், ’தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் நீட் பயிற்சி வகுப்பு, தமிழ்நாடு முழுவதும் 412 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
அதில் 100 மையங்கள் ஆரம்பம் முதல் செயல்பட்டு வருவதால், மீதமுள்ள 312 இடங்கள் நீட் பயிற்சி மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீட் பயிற்சி மையத்திற்கென்று ஆசிரியர்கள், கணினி பொருட்கள் என அனைத்து வசதிகளுக்கும் அரசு சார்பில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடையநல்லூரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ஏழு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுவிட்டனர் என்று போலி தகவல் தயார் செய்து, தலைமை ஆசிரியர் பண மோசடி செய்துள்ளார். அவ்வாறு, ஆசிரியர்கள் ஏதும் பணிக்கு அமர்த்தவில்லை. இதுகுறித்து, தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் பெற்றும் முறையான சான்று இல்லை.
பண மோசடி குறித்து மனு அளித்தும் தலைமை ஆசிரியர் மீது இன்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வறுமையில் பின்தங்கிய, நல்ல மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்கள் நீட் தேர்வு தோல்வியினால் தவறான முடிவுக்கு வருகின்றனர். எனவே, பண மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.