கொரோனா வார்டுகளில் பணியாற்ற கூடுதல் மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களை வழங்குமாறு டெல்லி அரசிடம் தனியார் மருத்துவமனை கோரிக்கை வைத்துள்ளது
உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றின் தாக்கம் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை 47,102 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 837 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப் பட்டதால் தொற்றின் பரவல் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரசின் மதிப்பீடு படி ஜூலை மாத இறுதிக்குள் டெல்லியில் 5 லட்சம் மக்கள் தொற்றினால் பாதிக்கப் படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து டெல்லி முழுவதிலும் இருக்கும் 22 கொரோனா மருத்துவமனைகளில் கூடுதலாக 20 சதவீதம் படுக்கை வசதியை அதிகரிக்க நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு அரசின் உத்தரவை தொடர்ந்து டெல்லி ஷாலிமார் பாக், ஓக்லா மற்றும் வசந்த் குஞ்ச் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் ஃபோர்டிஸ் குழுமத்தின் மூன்று மருத்துவமனைகளின் சார்பாக கொரோனா சிறப்பு வார்டுகளில் பணிபுரிவதற்கு மருத்துவ ஊழியர்களையும் சுகாதாரப் பணியாளர்களை வழங்கவேண்டுமென அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே படுக்கை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கால அவகாசம் கேட்டுள்ளதாக அப்பல்லோ இந்திரபிரஸ்தா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மற்ற பகுதிகளிலிருந்தும் மக்கள் சிகிச்சைக்காக நகரத்திற்கு வர தொடங்கியிருப்பதால் ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் டெல்லியில் மட்டும் 1.5 லட்சம் படுக்கைகள் தேவைப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் தெரிவித்திருந்தார். டெல்லியில் மொத்தமாக இருக்கும் 9,647 படுக்கைகள் இருக்கும் நிலையில் 8,402 படுக்கைகள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.