இருளர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட இருளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சாதி சான்றிதழ் கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மேலும் திரிமங்கலத்தில் சுமார் 129 பேர் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களில் வெறும் 4 பேருக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதே போல் ஏரிப்பாளையம், காராமணிகுப்பம், வடலூர் ஆகிய பகுதிகளிலும் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தோர்க்கு இன்னும் வழங்கப்படவில்லை. மேலும் பண்ருட்டியில் 248 பழங்குடியின இருளர் இன மக்களுக்கு மனை பட்டா வழங்கிய தாசில்தார் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் கொதித்தெழுந்த இருளர் இன பாதுகாப்பு சங்கம் தாசில்தாருக்கு ஆதரவாகவும் இருளர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரியும் மஞ்சக்குப்பம் கார் பார்க்கிங் அருகில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் துணைத் தலைவர், விடுதலை சிறுத்தை கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் போன்ற பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இந்தப் போராட்டத்தில் இருளர் இன மக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.