நீட் தேர்வு இந்த நிமிடம் வரை நடைமுறையில் உள்ளதால் அதற்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை என மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மா சுப்பிரமணியன் அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி தொடங்கப்பட்டது. அதனுடைய தொடர்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து முதல்வர் மு க ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் ஆலோசனை செய்து வருகிறார்.
இருப்பினும் இந்த நிமிடம்வரை நீட் தேர்வு நடைமுறையில் உள்ளதால் அதற்கு தயாராக வேண்டியது மாணவர்களின் கடமை என தெரிவித்தார். தனியார் நீட் பயிற்சி மையங்களின் கட்டணம் குறைப்பு தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.