மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு பரிந்துரையை அமல்படுத்திய பிறகே நீட் தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சம்மந்தமாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்திய பிறகு நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் சார்பில் முறையிடப்பட்டது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு வழக்கறிஞர் பிரசன்ன ராஜன் முறையீடு செய்தார். நீதிபதி கலையரசன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாமல் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என கேட்டுக்கொண்டார். இதுகுறித்து இன்று அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.