நெல் கொள்முதல் நிலையத்தை திறக்ககோரி விவசாயியினர் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களிடம் முற்றுகையிட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்த வருடம் 1 லட்சத்து 66 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியானது தஞ்சை, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து கோவிலூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காசாநாடு புதூர், காட்டுக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்தற்போது அறுவடை பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல்லை கோவிலூர் கொள்முதல் நிலையத்தின் முன்பு 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குவித்து வைத்து 8 நாட்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர். இதனால் 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி இருக்கிறது.
எனவே இந்த நிலையத்தை திறந்து நெல்லை கொள்முதல் செய்யுமாறு கோவிலூர் கிராம விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களிடம் முற்றுகையிட்டனர். ஆனால் இதுவரையிலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் இரவில் மழை பெய்யும்போது தார்பாய் போட்டு நெல்லை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் தரைவழியாக மழைநீர் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக இதுவரை சில முட்டைகளில் இருந்த நெல் வீணாகி விட்டது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் இருக்கின்றனர். ஆகவே இந்த கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.