கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் நெல் வைத்திருக்கும் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நாகலூர் அரசு கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை உலர்த்த முடியாத நிலை இருப்பதால் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருக்கருகாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நாகலூர் அரசு கொள்முதல் நிலையத்தில் தண்ணீர் தேங்கி அங்கு விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி வருகிறது.
அதுமட்டுமின்றி கொள்முதல் நிலையத்தை சுற்றி மழைநீர் தேங்கி நிற்பதால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இவ்வாறு விவசாயிகள் அறுவடை செய்து கொண்டுவரக்கூடிய நெல்லை கொள்முதல் நிலையத்தில் கொட்டி உலர வைக்க போதுமான வசதி இல்லாததால் அவர்கள் கடும் சிரமத்தில் இருக்கின்றனர். ஆகவே நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நாகலூர் அரசு கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, சேறும் சகதியுமாக உள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.