குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதனைப் திரும்பப் பெற வலியுறுத்தியும் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைதுசெய்தனர்.
இந்நிலையில், அவர் கடந்த 3ஆம் தேதி பிணை கோரி நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது சில காரணங்களுக்காக மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் பிணை கேட்டு அவர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஆட்சேபனை தெரிவித்தது மட்டுமின்றி, வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் கால அவகாசம் கோரினார்.
இதையடுத்து, நீதிபதி நசீர் அகமது பிணை மனு மீதான விசாரணையை வருகிற 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.