நெல்லையிலிருந்து தென்காசி வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக தொடரப்பட்ட வழக்கில் நெடுஞ்சாலை துறை செயலர் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசேகர பாண்டியன். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நான்கு வழிச்சாலை அமைப்பது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நெல்லையிலிருந்து தென்காசி வரை சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு 412 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்திற்கான பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கி 2020 செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடைய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது வரை பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. மேலும் நெல்லை-தென்காசி இடையே உள்ள சாலைகளில் அதிக அளவில் அபாயகரமான வளைவுகள் உள்ளது. நான்கு வழிச் சாலைகளை அமைக்க இதுவரை சாலையோரம் உள்ள 1400 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே சாலை ஓரங்களில் உள்ள நிலங்களும் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
மேலும் மழை காரணமாக சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நெல்லையிலிருந்து தென்காசி வரை உள்ள நெடுஞ்சாலையில் சாலையை விரிவுபடுத்தி நான்கு வழிச்சாலையாக அமைக்க உத்தரவிட வேண்டும்” என்று தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தியின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து நெடுஞ்சாலைத் துறை செயலர் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.