நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றம் நேற்று சிறப்பாக தொடங்கியது.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் முக்கியமானவை ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஐப்பசி மாதம் திருக்கல்யாண விழா இந்த கோவிலில் மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் ஐப்பசி மாதம் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்நிலையில் காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் வருகிற 1-ஆம் தேதி சேரன்மகாதேவி சாலையில் அமைந்துள்ள காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையடுத்து 2-ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண விழா நடைபெற இருக்கிறது. மேலும் திருக்கல்யாணம் முடிந்து 3 நாட்கள் ஊஞ்சல் வைபவமும், நிறைவாக சுவாமி-அம்பாள் மறுவீடு பட்டினப்பிரவேசமும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.