நெல்லையப்பர் கோவிலின் அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் இக்கோவிலில் சிறப்பு அம்சமாக கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்கு புறங்களிலும் வாசல்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் 2004ஆம் ஆண்டு கோவிலின் வடக்கு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவம் காரணமாக வடக்கு பக்க வாசல் திருவிழா காலங்களில் தவிர மற்ற நேரங்களில் திறக்கப்படாது. இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் நெல்லையப்பர் கோவிலை ஆய்வு செய்தபோது பக்தர்கள் கோவிலின் நான்கு வாசல்களையும் திறக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில் திறக்கப்படாத வாசலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
இதனையடுத்து பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் கோவிலில் நான்கு வாசல்களும் காந்திமதி யானையின் முன்னிலையில் கஜ பூஜை நடத்தப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கோவில் அலுவலர் ராம்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் ஏராளமானோர் தரிசனத்திற்காக குவிந்தனர். இதனையடுத்து பக்தர்களை கொரோனா வழிமுறைகளை பின்பற்றி தரிசனத்தில் கலந்து கொள்ளுமாறு பாதுகாப்பில் ஈடுபட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.