Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு … பரிவேட்டை நிகழ்ச்சி உற்சாகம்… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..!!!

நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் பரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் தை மாதம் ஆண்டு தோறும் பொங்கலுக்கு மறுநாள் கரிநாளில் சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். நெல்லையப்பர் குதிரையில் வேட்டைக்கு செல்லும்போது காந்திமதி அம்பாள், கரிநாளில் வேட்டைக்கு செல்ல கூடாது என தடுப்பார். தடையை மீறி நெல்லையப்பர் வேட்டைக்குச் செல்லுவார். இதனால் கோபமடைந்த அம்பாள், நெல்லையப்பர் வேட்டை முடிந்து திரும்பும்போது கோவில்கதவை மூடியதாகவும், அதன்பின்னர் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட திருமுருகன்பூண்டி பதிகம் பாடிய பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டதாகவும் ஆன்மீக வரலாறு கூறுகிறது.

இதனடிப்படையில் நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், சந்திரசேகரர், உற்சவ மூர்த்தியாக வெள்ளி குதிரை வாகனத்தில் கண்ணப்ப நாயனாருடன் புறப்பட்டு சென்றார். பின்னர் பழையபேட்டையில் அமைந்துள்ள பரிவேட்டை மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி குதிரை வாகனத்தில் நெல்லையப்பர் கோவிலுக்கு திரும்பினார். சுவாமி கோவிலுக்கு வந்தபோது அம்பாளின் ஊடலினால் சுவாமி சன்னதி கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன்பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய பதிகம் பாடி ஊடல் தீர்ந்த பின்பு கோவில் கதவு திறந்து சுவாமி கோவிலுக்குள் நுழைந்தார். இந்நிகழ்ச்சியை கண்டுகளிக்க ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்கள்.

Categories

Tech |