சொத்து தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் கோபால்- மாரியம்மாள். இவர்களுக்கு சண்முகராஜ் என்ற மகன் உள்ளார் . மாரியம்மாள் குடும்பத்தினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மைனர் முத்து என்பவரின் குடும்பத்திற்கும் வெகு நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது.இதனால் அடிக்கடி அவர்களுக்குள் மோதலும் நடந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.
அப்போது மைனர் முத்துவும் அவரது உறவினர்களும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் மாரியம்மாள் மற்றும் அவரது மருமகள் மனோகரம்மாளை சரமாரியாக தாக்கினர் . இதில் அவர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மனோகரம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மாரியம்மாளின் மகன் சண்முகராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து மைனர் முத்து மற்றும் அவரது உறவினர்களை தேடி வருகின்றனர்.